வருகிறேன்...
வருகிறேன்...
அனைவருக்கும் வருகிறேன்...
வருகிறேன் என்றால்
வருகிறேன் என்பதல்ல,
இனி வரவேமாட்டேன்
என்பதே பொருள்...
அங்கே பாருங்கள்...
ஓர் அழகிய
தேர் தயாராகிறது...
பச்சை மூங்கிலும்
பச்சை ஓலையும்
சேர்த்து பின்னிய
தேர் எனக்காக காத்திருக்கிறது...
இதுவரை சூடாத
பல மலர் மாலைகள்,
என் மார்பின் மேல்
மலைகளாக குவிகிறது...
இதுதான் என்
வாழ்விற்க்கு என்
வாழ்க்கை தந்த வெகுமதியா...
இங்கு பாருங்களேன்...
ஒரு அதிசயம் நிகழ்கிறது...
என்னை சுற்றி
ஓர் வட்டமேசை மாநாடு...
தம்பி சொன்னான்
திண்ணை எனக்குத்தான்...
அண்ணன் புலம்புகிறான்
அந்த புளியமரமும்
எனக்குத்தான் என்று...
தங்கை கேட்கிறாள்
இவன் என்ன செய்தான்
நான் செய்ய...
பாவம் அவளுக்கு தெரியாது
என்னால் முடிந்ததை செய்தேனென்று...
மகனும் மகளும்
கைகள் பற்றி கதறுகையில்
என் பதறாத
இதயம் கொஞ்சம்
பதறி போகிறது...
மனைவி மாரடித்து
மண்ணோடு சரிகையில்
மனம் எரிமலையாய்
வெடித்துப் போகிறது...
தாயவள் மடிமீது என்
தலை சாய்த்து
விம்மி அழுகையில்
ஆறுதல் சொல்ல
நான் இனி
எப்படி வருவேனோ...
தகப்பன் தள்ளாடி
நிர்கதியில் நிற்க
தோள் கொடுக்க
துடிக்கிறதே என் தோள்கள்...
கூட்டத்தில் ஒருவன்
சொல்கிறான்...
இவனை போல்
இன்னொருவன் இருக்கிறானா...
கொஞ்சம் பொறுங்கள்
கொஞ்சம் அமைதியுடன்
என் அருமை
தோழன் என்னை தேடுகிறான்...
எனக்கு பிடித்த
கடலை மிட்டாயுடன்...
என்ன பதில்
நான் சொல்ல...
என்
எதிரி எதிரில்
வந்து என்
காலை தொட்டு
கும்பிட்டு சொல்கிறான்...
இனி எந்த
மதயானையை எதிர்த்து
என் நெஞ்சம்
உறுதி பெறுமோ...
வந்துவிட்டான் நான்
தேடியவன் வந்துவிட்டான்...
இவன் தான்
அவன் என்
நிழல் போல்
இருந்து எனக்கே
குழி பறித்த
குள்ளநரிகளின் கூட்டத்
தலைவனான துரோகி...
அவனது
கண்ணுக்கு தெரியாத
அந்த குழிகளில் தப்பித்தவன்...
இப்பொழுது கண்கள்
இருந்தும் காணாமல்
ஆறடி குழியில்
அகப்படப் போகிறேன்...
நான் செல்லும்
வழியில் பூ
மணந்தாலும் மணக்கும்
பின் தொடர்ந்து
யாரும் வராதீர்கள்...
என் நிழல் மட்டுமே
என்னோடு வருகிறது
இறுதி வரை...
இருக்கும் போது
மிதித்தேன் இருந்தும்
நான் இறந்த போதும்
என்னை தாயாகவே
என் பின்
மறைந்து சுமக்கிறது...
மண்ணின் பாரத்தை விட
வாழும் போது உறவுகள்
தந்த உணர்வுகளின் பாரமதை
என்னால் சுமக்க முடியவில்லை...
✍️விசித்திரக்கவி
கவிஞரே படித்தேன்,
ReplyDeleteசிரிப்பு வரவில்லை,
ஆனால் அழவில்லை...!
அருமையான உண்மையான வரிகள் 👌🏼👌🏼👌🏼👌🏼
ReplyDelete