Posts

Showing posts from 2021

விடைகள் அறியுமா...

Image
வானவிலுக்கு வயதாகுமா வெண்ணிலவு விண்மீனாகுமா...? வெற்றி சொல்லி  தோல்வி  தோழனாகுமா...? வானத்திற்கு வாசலுண்டா தென்றலுக்கு தேகமுண்டா...? பனித்துளிப் போல் -ஓர் மழைத்துளி உண்டா...? இமைமூடும் நேரம்தான் இருளின் நிறமா...? மெழுகு உருகி தீயெரிவது வரமா...? தேகங்கள் இணைவது தேன் சுகமா...? நீருண்ட மேகங்கங்கள் நினைவுகளை உண்ணுமா...? வினாவுக்கு விடைதான் சரியான பதிலா...? பதில் தெரிந்ததினால்தான் கேள்வி சரியா... தவறுக்கு தண்டனை போதும் என்றால் நீதிக்கு தான் நித்தம் நிம்மதியா...? ஆசை வருவது உணர்வு என்றால், உள்ளூற அழுவது உத்தமனின் சுகமல்லவா...? முத்தங்களில் ஓசை முத்து அறியுமா...? முத்தின் காலம் முத்தம் பொறுக்குமா...? ஓசைகள் மட்டுமே உன்னத பாசைகளா...? அசைவுகள் சொல்லி அர்த்தங்கள் புரிவதில்லையா...? கோவம் கொண்டு  கொதிக்கும் எரிமலை, தாகம் வந்தால் தண்ணீராய் மாறிடுமா...? காரணங்கள் சொல்லி கண்ணீர் கரைசேர்ந்திடுமா...? காயம்கொண்ட தழும்புகள் வேதனைகளை வென்றிடுமா...? எத்தனையோ வேதங்கள் எத்தனையோ கேள்விகள் எத்துணைதான் யாருக்கு எத்தனைநாள் பயணத்திற்கு...?              ...

என்னாசைக்கு வேலிஉன் புருவத்தின் பார்வையடி ...

Image
விண்ணோடும் மண்ணோடும் உந்தன் விழியோடும் ம்ம்ம்... எத்தனைக் கோடி விளங்காத மர்மங்களடி... மல்லிகை தேசத்து பெண் நிலவே மயக்கத்தினைக் கூட்டியப்பின்  தயக்கம் ஏனடி...! ஆசை மயிலே அழகிய எழிலே உன் மச்சம் கிள்ளி என் மனசெல்லாம் பூக்குதடி...! புது வெள்ளி பொன் ரதமே வளை கொஞ்சும் குவளைச் சரமே... மின்மினி கண்களால் மின்னல் அடித்து, அனல்மேல் தள்ளி சாரலாய் பொழிகிறாய்... போதும் போதுமடி இனியும் தாங்காது வண்ணத்து பூச்சிக்கு வானம் நீயடி.. என்னாசைக்கு வேலி உன் புருவத்தின் பார்வையடி ... விண்ணோடும் மண்ணோடும் உந்தன் விழியோடும் ம்ம்ம்... எத்தனைக் கோடி விளங்காத மர்மங்களடி...     -விசித்திரக்கவி   

கண்ணுறங்கு

Image
சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு... கனவுகள் பாடி நினைவுகள் ஆட சித்திரை நிலவே நித்திரை கொள்ள சீக்கிரம் கண்ணுறங்கு... சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு... மடிமீது சாய்ந்து மனதோடு பாய்ந்து மந்தாரை பூவாய் மானே கண்ணுறங்கு மானே நீ கண்ணுறங்கு... உன் நினைவா ஊஞ்சல் ஒன்னு உள்ளே இருக்கு, உசுருக்குள்ளே ஊடுருவி உருவம் கொஞ்சம்தான்  நீ மறந்து, தாலேலோ பாடுறேன் தங்கமே நீ கண்ணுறங்கு... சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு... காலம் தடுக்கி கால் உடையாது காயும் கண்ணீரில் கப்பல் போகாது என் கண்மணியே கண்ணுறங்கு... கண்ணுறங்கு வேளையிலே என் கண்மூடி போகட்டும் காலம் நேரம் நீ மறந்து காலமெல்லாம் நீ வாழவேனும்... சீக்கிரம் கண்ணுறங்கு... சின்ன பூவே-என்  சிங்கார கண்ணே சீக்கிரம் கண்ணுறங்கு...-எங் காதலியே கண்ணுறங்கு...           -விசித்திரக்கவி   

கண்ணீருக்கு இவர்களே பொறுப்பு...

Image
(ஆண்) உசுருக் குள்ள என்னை வச்சி ஒத்தையில போற புள்ள ஒத்தையடி பாதையில உச்சி வரும் வேளையில பாதையது  நீளுமடி... (பெண்)  போனதெல்லாம் போகட்டும் போறவழி பூக்கட்டும் பாதியில வந்தவனே ஆதியென ஆனதென்ன...? (ஆண்) மீதியின்னு ஒன்னுமில்லை பஞ்சம் என்னும் பார்வையில என்நெஞ்சம் ஒன்னுகல்லுயில்ல புத்திகெட்டு போகையில புத்துயிரா வந்தவளே புலம்பிகிட்டு போறதென்ன...? (பெண்) பாசமென்னும் பாதையில பாவமுன்னு ஒன்னுமில்ல பரதேசம் போனாலும் இந்த  பாவிமகளை மறக்காதே ராசா... உசுருக்குள் பூட்டிகிட்டேன்  உன்னோடு முட்டிகிட்டேன் ஊரும் வந்துடுச்சி உள்ளுகுள்ள போ... ராசா.... (ஆண்) காலநேரம் தூரமில்ல கடவுள்கூட தோதாயில்ல காதலெனும் நம்மபுள்ள  காத்தோடு வாழட்டும் புள்ள... (ஆண்) உசுருக் குள்ள என்னை வச்சி ஒத்தையில போற புள்ள ஒத்தையடி பாதையில உச்சி வரும் வேளையில பாதையது  நீளுமடி...                  விசித்திரக்கவி 

ஐயனே...

Image
அப்பனே... ஆருரானை ஆட்கொண்ட அறிய அருளே அப்பரின் அன்பனே சுந்தரனே சதாசிவா... இப்பிறவியில் இல்லாத பொல்லாத பிழையெல்லாம் கொள்ளாத அளவு அறிவிழந்து செய்தேனே... உள்ளம் வேகுதே-உன் கருணை தேடுதே சிவசிவா என்கிறேன் சீக்கிரம் வாருமையா... வெண்நிற விடையேறி பித்தனே பித்தனெனை சித்தனென சிந்தை தெளிய நாதனே நல்லருள் புரிவாய்... நாயகனே நாயினன் நானே அம்பலத்தானே என்னையாக்கியது நீதானே நஞ்சனே நாகம் கொண்ட பிஞ்சனே பிதற்றுகிறேன் நானே... ஐயனே அல்லும் பகலும் எனை ஆள்பவனே அடி நெஞ்சில் ஆழ்ந்தவனே அடியாரின் ஆண்டவனே... காட்சிகள் ரெண்டினை கண்டேன் கரமொன்றை நள்ளிரவில் கொண்டேன் நந்தியினை நாதனெனே நானும் நெஞ்சினிலே அடைத்தேன்... சிவாயநம... சிவாயநம... சிவசிவ என்றேன் அபயமென உபயம் தந்தான் உள்ளமெல்லாம் தேனூற தேவனே ஜீவனானான்...                  ✍️விசித்திரக்கவி 

காலனே கேளடா...

Image
கண் மூடி கண்ணுறங்க போகிறேன் காலனே காவலுக்கு பக்கத்தில் வாருமடா... கண்ணிமை அசையாமல் கண் விழிக்கும் வரை சிவசிவா என்றே ஜீவனை காத்திடு... நீயும் நானும் நடமாடும் சவமடா சிவமே நம்மில் சக்தியென கூறடா...            விசித்திரக்கவி 

தமிழே நீயும்...

Image
எட்டய புரத்தானும் எட்டாவதாக பிறந்தவனும் கவிஞனாய் ஆகும்போது ஏழை வீட்டில் பிறந்த நானும் கவிஞன் இல்லையா... வார்த்தைகளையும் கற்பனைகளையும் வாழ்வியலோடு வளைத்து வர்ணங்களை கூட்டும் கம்பனையும் வள்ளுவனையும்-போல் நானும் தமிழை நேசிக்கலையா... இல்லாத வீட்டில் பொல்லாத பிள்ளை பிறந்தா னென்று தமிழே நீயும் தாயாகலையா...! தவிக்கும் போதெல்லாம் தாகத்தினை தீர்க்கலையா...! தேன் கலந்து தாய்தமிழை நீ ஊட்டலையா...! செந்தமிழே சிந்தனையில் வைத்தேன் செந்தீயில் தத்தளிக்க விட்டாயோ...? அறிந்ததெல்லாம் தமிழே தமிழே போற்றுவதெல்லாம் உன் புகழே...! இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளையென தாயே நீயும் எனை தள்ளிப் போனாயோ...! ஆவென...ஓவென நான் அழுது உயிரும் உடலும் வியர்த்தால் தாயே நீயும் தாங்கிடுவாயோ...! பாண்டிய நாட்டு-எம்  பவளக் கொடியே பக்தனாய் நான் வாழ பாரபட்சம் ஏனடி...?              -விசித்திரக்கவி 

ஆவணித் திங்கள்-என்ஐயம் தீருமா...!

Image
கண்ணா...! கண்ணா...! கண்ணெல்லாம் பாடுது நெஞ்சமெல்லாம் வேகுது அங்கமெல்லாம் அழுகுது உன்குரல் திசைகேட்டு செவிகள் ரெண்டும் ஓடுது, உயிரும் வாடுது-அது உள்ளூற உனை தேடுது... ஆறுதல் சொல்ல ஆகாயம் விட்டு வாராயோ...! காற்றை கரைத்து கீதமென சொல்வாயோ...! மாயங்கள் பல புரிந்து மானிடனெனை மயக்குவாயோ...? மாயவனே மணிவண்ணா...? பாரதம் கொடுத்தவனே பரந்தாமா...! பாவியெனை பாரடா பாரெல்லாம் கேளடா, பட்ட துன்பம் பாதி தருகிறேன்... பாற்கடலே கதியென பாம்பே பாய்யென பக்கத்தில் தேவியென பாதி உறக்கமேனடா...? ஆட்டி வைப்பவனே-நீ ஆட்டத்தில் வேடிக்கையா..! ஆடுபவன் எல்லாம் உன் கைப்பாகையா...? ஆட்டம் முடியுமா-அது அது அரங்கமேறுமா...? ஆவணித் திங்கள்-என் ஐயம் தீருமா...!                         ✍️விசித்திரக்கவி 

கள்ளியாய் வில்லியாய் சாகசங்கள் போதுமடி...

Image
வெண்சங்கு நீரெடுத்து விண்மீனை பிரித்தெடுத்து தேன்கலந்து கொஞ்சம் தேகத்துக்கு உருகொடுத்தானா...! வெண்ணிலவை விளக்காய் வைத்து அங்கமெல்லாம் தங்கமென அளந்து அளந்து அசைவு கொடுத்தானா...! இசைக்கு இசைவாய் இடைக்கு கொஞ்சம் இசைவு இசைந்து இன்னிசை மீட்டுக்கிறாய்... கண்களால் மத்தளம் கொட்டுக்கிறாய், காற்றைத் தொட்டு களவரம் செய்து கைதியாய் சிறையிலடைக்கிறாய்... சின்னச் சின்ன குறும்புகள் செய்கிறாய் செவ்வானத்தில் செம்மீனை ஏனடி தேடுகிறாய்...! செய்வதெல்லாம் செவ்வனே செய்து வைக்கிறாய், செவ்வந்தி பூக்களுக்குள் சண்டையினை மூட்டுகிறாய்...! புல்லாங்குழலாய் உன் குரல் கேட்டு பூக்கள் எல்லாம் பூப்படைந்து பூக்கிறது....! காய்க்காமலே அது  கனி ஆகிறது... கள்ளியாய் வில்லியாய் சாகசங்கள் போதுமடி என் சாதாரண கண்கள் சத்தியம் தாங்காது...                   விசித்திரக்கவி 

சில நேரம்....

Image
(சில நேரம்....) சின்னச் சின்ன கண்ணீர் துளிகளை நிம்மதியென நெஞ்சம் கொஞ்சம் ஏங்குமே... (சில நேரம்....) சொல்ல வரும் வார்த்தைகளை சொல்லாமல் நாடு கடத்த மவுனம் தோன்றுமே... (சில நேரம்....) விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து விதியை நொந்து மனம் பாடுமே... (சில நேரம்....) மயக்கம் கொள்ளும் மானிடர் மத்தியில் மாயவித்தை காட்டுமே மனசாட்சி அதிகமது குத்துமே... (சில நேரம்....) சில கவிதைகள் பல நேரம் காகிதங்களை கண்ணீரில் கரைய வைக்குமே... (சில நேரம்....) எட்டிய பொருள் கிட்டாமல் போனால் நெஞ்சத்தை முட்டுமே துக்கத்தை தூண்டுமே... (சில நேரம்....) தேடித்தேடி சேர்த்ததெல்லாம் தேளாய் கொட்டுமே தேன் கூட தினம் கசக்குமே... (சில நேரம்....) நிழலும் நிம்மதியில் நித்தம் வாழுமே நிஜம் மட்டும் சோதனையில் வாழுமே... (சில நேரம்....) சில நேரம் பல நேரம் நரகத்தில் நாடோடியாய் நடக்க கற்றுத் தருமே... (சில நேரம்....) அந்நேரம் எந்நேரமென இந்நேரம் சில உள்ளங்கள் உள்ளூற பார்த்திருக்குமே...                        _விசித்திரக்கவி    

கலைமகளே பாரடி...

Image
மாயையில் விழுந்தேனடி மயக்கங்கள் கொண்டேனடி... மாமனிதர் மத்தியிலே, மடையனென தவழ்ந்தேனடி... அறிந்ததென ஆயிரமும் பாவங்கள் தானடி... பாவலர் அகத்தினிலே, நீ மட்டும் தெய்வமடி... தேடித்தேடி அலைகிறேனடி தெள்ளமுதே நீ எவ்விடம்...? அவ்விடம் சொல்லடி ஏறேடுத்து கொஞ்சம் பாரடி... எண்ணங்களை தொலைக்கிறேனடி, தொலைதூரம் நீயும் போவதுதான் என்னடி...? தீயிலெனை வாட்டுவது நீயின்றி யாரடி...? கண்ணிரெண்டும் நீயடி -என் சிந்தையிலே வேறாரடி...? கலைமகளே கண் திறந்து பாரடி... யான்பிரிந்த போதிலும் நீயெனை மறப்பாயா...? பிள்ளையெனை தாய் நீ துறப்பாயா...? வெண் தாமரை பூ வெடுத்து, செந்தாமரையடியில் அகரங்கள் நான் சொல்ல அருள்வாய் நாமகளே...                                 ✍️விசித்திரக்கவி 

மாயங்கள் சொல்லும் மர்மங்கள்

Image
காலம் நேரம் பார்த்தே காதல் மழை பொழிந்திடுமா...? அலைகடல் மோதி கரையென்ன கரைந்திடுமா...! காற்றடித்து நிழல் பறந்திடுமா...! கருமேகம் அணைத்து நிலவென்ன மயங்கிடுமா...? கொஞ்சம் மறைந்திடுமா...! கனவு சொல்லி நினைவு வந்ததா...? நினைவு சொல்லி - உன் கனவு வந்ததா...! பூவைக் கேட்டு வண்டு வந்ததா...! வண்டைக் கேட்டு - இல்லை பூப் பூத்ததா..? மின்னல் அடித்த பின்னே இடி இடிப்பது, நியாயம் தானே-இது இயல்பு தானே... உடல்பட்ட துன்பம் மனது அறியுமே..! மனதுபட்ட துன்பம் கண்கள் மட்டும் சொல்லுமே...! களவு போன இதயம் கேட்குமா...? இதயம் சொல்லி மூளையென்ன கட்டிப்போடுமா...? அன்பு வந்த பின்னே, ஆசை வருவது குற்றமா.....?              ✍விசித்திரக்கவி 

என் அதிகாலைப் பொழுது...

Image
அதிகாலைப் பொழுதெல்லாம் அவள் முகம் பார்த்தே, அழகாய் என்னுள் விடிகிறது... வெண் நிலவு மறைந்த பின்னே பெண் நிலவு இன்னும் மயங்குது... மயக்கும் கண்கள் மயங்கிக் கிடக்குது மத்தாப்பாய் உதடுகள் அதிகம் சிரிக்குது... எதையோ சொல்லுது ஏக்கங்களை கூட்டுது ஆசையாய் கிள்ள கன்னங்கள் பூக்குது... வானவில் ரெண்டும் வாடி கிடக்குது அதை கருமேகம் சூழ்ந்து கிடக்குது... இராத்திரி நேரத்து இரகசியங்கள் கொஞ்சம் செல்லமாய் எட்டிப்பார்க்குது மீண்டும் இதயத்தை மெல்லமாய் தட்டிப்பார்க்குது... அன்னம் அசையாமல் அசந்து அழகு மயிலென அடி நெஞ்சில் மத்தளம் கொட்டுது...           ✍விசித்திரக்கவி 

காதல் வந்த பின்னே...

Image
காதல் வந்து தொட்டப் பின்னே நெஞ்சம் தாங்குமா கொஞ்சம் தூங்குமா...! இரவு வந்த பின்னே நிலவு நீங்குமா நீரில்லாமல் மீன் நித்தம் நீந்துமா...! காதல் காற்றுப்பட்டு கவிதைப் பூக்குதே உன் வாடைத்  தொட்டுத் தூக்குதே...! அழகுப் பார்த்து ஆசைத் தாக்குதே அது ஆழம் பார்த்துத் தள்ளுதே...! ஆசை முத்தம் அஞ்சாறு கேக்குதே அச்சம் வந்து மிரட்டிப் போகுதே...! இந்த இரவெல்லாம் வேர்த்துப் போகுதே என் கனவெல்லாம் நீர்த்துப் போகுதே...!                ✍விசித்திரக்கவி

சந்தேகம் வேண்டாமடி...

Image
கண்கள் ரெண்டும் கருப்பு வெள்ளை ஓவியமா...? காதல்மொழி பேசும்-என் கற்பனைக் காவியமா...! எண்ணத்திரையில் தோன்றும் வண்ணத்திரை பாவையம்மா, நீ பல்லவ நாட்டின் பதுமையம்மா...! தேன்துளி கொண்டு தேவதை நீயென வரைந்தானா...! தித்திக்கும் தமிழ் கொண்டு செவ்விதழ் படைத்தானா...! செந்நிறப்பூ கண்டு செவ்வாழை தண்டென, செந்தமிழ் நாட்டு பெண்ணுக்கு உரு கொடுத்தானா...! பூங்காற்றை பூவென பறித்து நிலவென உருக்கி, உயிர் கொடுத்தானா...! பூச்சரமாய் தொட்டுத்தானா...! தேவதைகளின் நகலென நகம் வைத்தானோ...! தேகம் எல்லாம் சந்தனத்தால் இளைத்தானோ...! இளையவளே கண்ட நாள்முதல் கனவுகளில், தொட்டுத்தொட்டு பார்க்கிறேன்...! தூக்கத்தினை தொலைக்கிறேன்...! சந்தேகம் வேண்டாமடி சந்திரனும் சொல்வாண்டி...! சாட்சியென கொள்ளடி சம்மதமென கொஞ்சம் சொல்லடி...!                    ✍விசித்திரக்கவி

நெஞ்சோரம் கொஞ்சம் கலவரம் கூட்டடி...!

Image
சித்திரங்கள் பார்க்குதடி சிலையெல்லாம் வேர்க்குதடி...! சிணுங்கி சிணுங்கி நீ சிரித்தால், சித்திரங்கள் பாவமடி... பட்டு உடையில் சிட்டென நீ வந்தால், சட்டென உடையும் என் இதயமடி...! சந்தனமும் குங்குமமும் சங்கீதம் பாடுதடி...! சித்திரை நிலவாய் தேகம் மின்னுதடி...! வளையளும் கொலுசும் என்னடி பேசுது...? உனை கண்டால்-என்  கண்களுமிங்கே கூசுது...! மல்லிகை பூவும் மனசுக்குள்ளே பாடுதோ...! மானே நீ தொட்டதால்,சிலிர்த்ததோ...! தோகை மயிலாய் ஆடுகிறேன்,பாடுகிறேன்...! பாவை நீயும் பார்த்திடடி  நெஞ்சோரம் கொஞ்சம் கலவரம் கூட்டடி...!             ✍விசித்திரக்கவி 

விசித்திர வரிகளின் சொந்தக்காரி

Image
  விசித்திர வரிகளுக்கு இவள் சொந்தக்காரி எனையாளும் மாயங்கள் தெரிந்த மந்திரக்காரி... காலமெல்லாம் என் காற்றுப் பைக்குள் கடிகார முள்ளாய் சுற்றும் தந்திரக்காரி... மூக்கு வியர்க்கும் முன் கோபக்காரி மூச்சென துடிக்கும் முல்லைபூ வாசக்காரி  நிழலென வருவாள் நிம்மதி தருவாள் நித்தம் அணைப்பாள் அனைத்தும் ஆவாள்... ஆக்கத்தின் ஆதாரமாய் -என்  ஏக்கத்தின் அச்சாரமாய் என்னுள் வாழ்கிறாள்...                  ✍விசித்திரக்கவி 

வரிகளாய் வாழ்வேனா...

Image
  தேனென இன்னிக்கும் தேவியின் கன்னங்கள் தெவிட்டாத இன்பத்தின் இதயச் சின்னங்கள்...! அல்லி இதழின் அதிசயப் பிளவில் முல்லை சிரிப்பென  முரசாய் சாட்டுகிறாள்...! நெஞ்சோரம் வேதனை கூட்டுகிறாள்-என்  விழியோரம் விளம்பரம் காட்டுகிறாள்...! விண்ணோடு வில்கொண்டு என்னோடு சமர் செய்கிறாள்...! மையுண்ட மலர்விழியால்  மண்ணோடு சாய்க்கிறாள் மடியோடு அணைத்து மனதிலே மத்தளம் கொட்டுகிறாள்...! காற்றிலே அசையும் நாணல் இடைகாட்டி நாணத்தால் நெளிகிறாள் கருநிற குழல் போர்த்தி மோகத் தீயாய் சுடுகிறாள்...! சகியின் சபரக் கண்களால் கற்பனைச் சாகரத்தில் ஆழ்த்திப் போகிறாள்...! பேதை நானும் ,  காகிதம் கொண்டு கொஞ்சம் நீந்திடுவேனா...! வரிகளாய் கொஞ்சம் வாழ்ந்திடுவேனா...!                ✍விசித்திரக்கவி 

சொன்னது அவள் தான்...

Image
  முற்பொழுதும் உன் கற்பனையிலே முழுமதியாய் வாழ்கிறேன்... மூச்சுக்கு மூச்சாய் உன் நினைவுகளையே சுவாசிக்கிறேன்... நித்தம் தேடுகிறேன் நிம்மதியிழந்து வாடுகிறேன்... மாங்குயில் நான் மாமர கிளையோரம் மயங்குகிறேன்... உயிரோடு உருவமிழந்து உன்னைத்தான் தேடுகிறேன்... அருவமாய் உன்னருகில்  உணர்வாய் உறைகிறேன்... அறியாமல் போகாதே அடியோடுயெனை சாய்க்காதே... அந்தி நேரத்தில் -நீயும்  அகிம்சையினை கூட்டாதே... ஆகாயத்தில் அலைகிறேன் கள்வனே உனை அழைக்கிறேன்... கண்கட்டி வித்தை போதுமடா  கண்ணெதிரே வாழ்ந்திட, என் வாசல் தேடி வந்திடு...                      ✍விசித்திரக்கவி 

சிந்தை தெளிந்தேன்...

Image
கலையான உனை  சிலையெனக் கண்டேன்...! சிலநேரம் கண்களும்  கவிபாடக் கண்டேன்...! காற்றில் நிழல் அசையக் கண்டேன்...! அப்போதுதான் நான் கொஞ்சமுயிர் கொண்டேன்...! அசைந்தது நிழலா  ஐந்தடி சிலையா...! அதிசயம் கண்டேன் ஆகாயத்தில் பறந்தேன்...! இதயம் இழந்தேன் காட்சிகளில் விழுந்தேன்...! கற்பனையில் தவழ்ந்தேன் காற்றினில் கலந்தேன்...! எண்ணம் தொலைத்தேன் உன்னில் திழைத்தேன், எழுத்தினை கூட்டி காகிதத்தில் கழித்தேன்...! அத்தனையும் பிழையென ஆத்திரத்தில் கிழித்தேன்...! இரத்தம் பிழிந்து, சித்திரமென சிந்தை தெளிந்தேன்...              ✍️விசித்திரக்கவி 

அல்லி கண்களால் கிள்ளி பார்க்கிறாள்...

Image
ஆனந்தம் ஆனந்தம் அதிகாலையிலே பேரானந்தம்... கொஞ்சம் துள்ளப்பாக்குது நெஞ்சத்தை மெல்லப்பாக்குது... மெல்லமாய் வந்து போகுது செல்லமாய் எனை பாக்குது, அந்தி வானமாய்-அது அழகுதனை கூட்டுது... அதிசய நிலவாய் ஆலோலாம் பாடுது... அட! எத்தனையோ இரவுகளில் இந்த இரவு இத்தனை சுகமா... ஓவியப் பெண்ணாய் ஒய்யாரமாய் வருகிறாள், சிங்கார மில்லாமல் சில்லென பார்க்கிறாள்... சின்னவள் செவ்வந்தி நிறத்தில் செவ்வாழைத் தண்டென அல்லி கண்களால் கிள்ளி பார்க்கிறாள்... காஞ்சி பட்டெடுத்து கண்ணுக்கு மையிட்டு வளவிக்கு செய்தி சொல்லி வானத்து நிலவென வைபோகம் வருகிறாள்... அத்தனை அழகும் இத்தனை நாள் காணாலையே, எத்தனை நாள் -இனி நான் இப்படியே... அம்மாடியோய்...! மஞ்ச தாலி தஞ்சம் கண்டாச்சி அம்மியும் அருந்ததியும் ஆசைதீர பார்த்தாச்சி... கன்னி மொட்டு எனை முட்டும் நேரமிது நான் மட்டும் பறக்கும் நேரமது...! கிட்டபோய் தொட்டு பார்க்கும் நேரமது சட்டென முழித்தேன் அத்தனையும் கனவிது...!               -விசித்திரக்கவி 

தொலைதூர வானம்

Image
  தொலைதூர வானம் தொலைவாக நீயும், தொலையாத நானும் நெடுந்தூர பயணம்... நட்டநடு ராத்திரியில் நந்தவன தோட்டத்தில், எத்தனையோ இன்பங்கள் -இன்று அத்தனையும் துன்பங்கள்... எட்டாத வானவில்லுக்கு ஏழு நிறமெதற்க்கு...? வந்து போகும் உன் நினைவிற்க்கு வாசற்படி எதற்கு...? வாடும் மலரக்கு வாசம் எதற்கு...? தேயும் நிலவிற்க்கு வளர்பிறை தான் எதற்கு...? ஓடும் நதிக்கு ஓய்விருக்கா...! ஓடாத கடலுக்கு நிலையென நீர்யிருக்கா...! உனக்கென நானிருக்க, எனக்கென யாருயிருக்கா...? வந்து நீயும் போன பின்னே என் நியாபகமிருக்கா...! அலையென மோதும் உன்னினைவின் மீதெனக்கு கொஞ்சம் கிறுக்கா...! என் மீதும் உனக்கும் வெறுப்பா...!              -விசித்திரக்கவி 

கண் மூடும் வேளையா இதுகண்களையே மூடும் வேளையா...

Image
கண் மூடும் வேளையா இது கண்களையே மூடும் வேளையா... கடவுளின் வேலையா இல்லை மனிதனின் பிழையா... தனி அறைக்குள் தணியாத தாகம் தனியே இருப்பதால் விடியும் மோகம்... முத்தி பெறும் சித்தி வரும் சக்தி தரும்-அதை  சிவமே தரும்... சிக்கி தவிக்கும் விக்கியே விழுக்கும் நாக்குகளும் நடமாடும்-நாடே நாளும் பாடையில் போகும்... போதுமடா மனிதா போதுமடா பொறுமைகொள் தனியே திறன்கொள் தரணியே உனதடா... தரித்திரம் போகட்டும் சரித்திரம் மாறட்டும் விசித்திரம் விலகட்டும் நலம் நச்சத்திரமாய் மின்னட்டும்... காற்றிலே காத்திரு காற்றை காத்திரு காலம் மாறும் கடமைகள் தொடரும்...                     என்றும் தமிழோடு                      -விசித்திரக்கவி 

காவியமும் ஓவியமும்

Image
காவியமும் ஓவியமும் குழைத்து குழைத்து செய்தானோ சொல்லும் பொருளுமென செந்தமிழிலே உனை படைத்தானோ... கண்கள் ரெண்டும் இரட்டைக் காப்பியமா...? கடைவிழியினிலே மடையென வழிந்து இளமையினை வாட்டுதே... புன்னகையாலே பூக்கிறாய் பூ லோகம்தான் தங்கிட்டுமா...! இவள் பதுமையென புலோகம் தான் ஏற்றிட்டுமா...? தாரகையேயுன் இதழ் கனியிலே இரட்டை வரிகளா...!  ஆழ்ந்தது பார்த்தால் இன்பத்தின் சுவைகளா... விழிகளுக்குள்ளே வண்டாடுதோ எதை கண்டு திண்டாடுதோ...! கண் மணிக்குள்ளே காப்பியங்கள் பல நின்றாடுதோ...! தென்னாட்டு நிலவே...! தங்க நிழலென உன்னில்  தங்கிக் கொள்ள தஞ்சமென புகுந்தேன்... தாங்கி கொள்ளடி கொஞ்சம் ஏந்திக் கொள்ளடி, தவழ்ந்திட்டுவேன், வீழ்ந்திடுவேன் மீண்டும் உன்னிலே ஆழ்ந்திடுவேன்...                  -விசித்திரக்கவி 

கற்பனை களவு போனது

Image
                              என்றும் தமிழோடு                       -விசித்திரக்கவி  கற்பனைகள் களவு போனது எழுதாக்கவிதைகள் ஏக்கம் கொள்ளுது, உவமைகளை தொலைத்து விட்டேன்  ஊமையென கொஞ்சம் ஆகிவிட்டேன்…   நெஞ்சம் இங்கே தூங்குது  தஞ்சமென எங்கோ போகுது,  நித்தம் பஞ்சமென பார்க்குது  நித்திரையில் சித்திரையாய் வேகுது… சித்தமெல்லாம் சிதைந்து போகுது  சிந்தனையிலே சிவந்து போகுது,  புருவங்கள் ரெண்டும் புலம்பி  புழுதிக்காற்றில் புழுவென துடிக்குது… காற்றுக்கும் கைகள் இல்லை  கனவுகளுக்கும் எல்லை இல்லை, கதைப்பார் யாரும் இல்லை  கதவடைப்பார் யார் இங்கோ…? வார்த்தைகள் வற்றிப் போய்  முதுகோடொற்றிய வயிற்றைப் பார்த்து  வாயடைத்து தூற்றி போகுது-இனி  மிச்சமென யெதுமீறப் போகுது… ஆண்டவன் பிழையா…? ஆள்கிறவன் பிழையா…?  ஆறறிவுதான் அகிலத்தின் பிழையா…?-இது  அறிந்தவனின் பிழையோ…  இதை யானும் ...

யுத்தம் செய்கிறாள்

Image
நான் கொஞ்சம்  கொஞ்சி மிஞ்சினால்...  சத்தங்கள் இன்றி  முத்தங்களால் என்னுடன்  யுத்தம் செய்கிறாள்... முழுமதி நிலவாய்  முற்கொண்ட ரோஜாவாய்  ஆகாயம் போல் விடிய விடிய  மேனிதனில் உலாவுகிறாள்... விழா கால விடியல் போல்  விடிய விடிய  விழாவை காட்டி தேவதை அவளோ  திருவிழா ஆகிறாள்...  திருவிழாவை ரசிக்க  வந்த என்னை  வசீகர பார்வையால்  திருட தூண்டுகிறாள்...  இவள்  கவிதையின்  மகளா இல்லை  ரவி வர்மனின்  ரகசிய ஓவியமா... ராந்தால் ஒளியில்  ரகசியங்களை கலைத்து  ராட்சசி அவள்  ரசனையோடு ரசிக்கிறாள்...  விண்மீனையும் மிஞ்சும்  பெண் தாரகையின்  கண்களோ இங்கு மின்மினிகள்...  கதையாய் கதை கேட்டும் பூங்கற்றே தீண்டும் தென்றலெல்லாம் -என்  ரதியின் கட்டுப்பாடே...  விரல்களால் புதியதொரு  தளம் போட்டு  அகிம்சையாக இம்சிக்கிக்கிறாள்  என் இம்சை ராணி...            🌹விசித்திரக்கவி  

மனிதனாய் பிறந்து விட்டேன்...

Image
கண்களை தொலைத்து விட்டேன், இமைகளை திறந்து  உறக்கத்தினை கனவுகளில் கொஞ்சம் தேடுகிறேன்... உரக்கச் சொல்கிறேன், உருமாறி உருகுழைத்து வேதனையிலே வாழ்கிறேன் புழுவாய் நெளிகிறேன்... நெஞ்சமெல்லாம் வேகுது பஞ்சாயது எரியுது பழிகளை சுமந்து பக்குவமாயது பார்க்குது... பாலென கண்டதெல்லாமெனை பாதாளத்தில் தள்ளுது பூவென கண்டதெல்லாம் பூநாகமாய் சீருது... மனிதனாய் பிறந்து விட்டேன். மன்னித்தே கொஞ்சம் மானமிழந்து விட்டேன்-இதையே மறுபடியும் சகிப்பேனா... கல்லெரிந்த கண்ணாடிப் போல சொல்லெரிந்து சிதறி கிடக்கிறேன் சிக்கித் தவிக்கிறேன் சிந்தனைகளை இழக்கிறேன்... வாழவே நினைக்கிறேன் வார்த்தைகளில் இறக்கிறேன் வெறுமையாய் உணர்கிறேன் வெற்றிடமாய் கிடக்கிறேன்...                  ✍விசித்திரக்கவி 

உழைத்து உழைத்தே உருகுலைந்து போகிறோம்...

Image
உழைத்து உழைத்தே உருகுலைந்து போகிறோம் ஒருபிடி சோத்துக்கே  ஓயாமல் சுமக்கிறோம்... அன்று முதல் இன்று வரை உழைத்தவனே ஓடாய் உடைந்து போகிறோம்... முதலாளி தத்துவம் முதலைபோல் ஆகுது... வரிகள் ஏறுது-அது வாய்க்கால் வரை போகுது ... உழவனே உழவுக்கு பயந்து ஓடுகிறன் நடப்பதையெண்ணி நாளும் வேதனையிலே வாழ்கிறான்... அரசு சட்டமெல்லாம் தரிசாய் போகுது  உழைத்தவன் குடும்பத்தில் தாலி மட்டுமே எஞ்சுது...        ✍விசித்திரக்கவி 

நீலவானிலே நீயும்,நிலவிலே குடிப்புகுந்தாயா...?

Image
உன் நினைவுகளெல்லாம் கனவுகளாக உருவெடுத்து நித்திரை நேரத்திலெனை நித்தமும் வாட்டுதடி... கண்ணாடி பிம்பமாய் கண்ணெதிரே கலையுதடி... கானல் நீராயது, கண்ணுக்குள் பாயுதடி... கண்ணீரும் செந்நீராய் கன்னத்தில் வழியுதடி... நெஞ்சம் வலியிலே, கொஞ்சம் கதறுதடி... காதல் மொழி பேசும் முன்னே, என்னுள் கவிதை-மொழி  கொஞ்சம் பேசினாய்... காதல் மொழி பேசிய பின்னே, மௌன மொழி -ஏனடி..? கொஞ்சம் சொல்லடி... நெஞ்சில் நிலைத்தவளே, நித்தமெனை விழியாலே நெஞ்சோடு சாய்த்தவளே -நீயும் நித்திரை கொண்டாயா...? நீலவானிலே நீயும், நிலவிலே குடிப்புகுந்தாயா...? காற்றாய் மாறி காதோடு மெல்லமாய் பேசடி...! காலங்கள் பல கடந்தே காத்திருக்கிறேன்... கண்ணோடு உன் நினைவுகளை மட்டுமே சேர்த்திருக்கிறேன்... என் வீட்டு -ராணியே எனக்கு முன்னே, எனைவிட்டு போனதென்ன...? உனக்கு மட்டும் சொர்க்க மென்ன...? ஏனடி போனாய்...? எங்கே போனாய்...? இங்கே, தவிக்கிறேன் நானடி கொஞ்சம் பாரடி...!            ✍️விசித்திரக்கவி              

ஓர் நாள் ஊரடங்கு

Image
ஓர்நாள் ஊரடங்கென்றால் எங்கள் வயிறடங்கிடுமா...? ரோட்டோரா வாழ்க்கையில் ரொட்டித் துண்டாவது கிடைத்திடுமா...? மூன்று வேளையில் ஓர் வேளையாவது இன்று உண்டிடுவோமா-இல்லை பசியிலே உறங்கிடுவோமா...? உழைத்தே உண்கிறோம் உணர்வுகளை துறந்து, சிலநேரம் பசியின் உச்சத்தில் கைகளை ஏந்துகின்றோம்... உரிமைகள் வேண்டாம் உணவாவது வேண்டும் கிடைத்திடுமா...! நாங்களும் பசி மறப்போமா...             ✍️விசித்திரக்கவி 

முட்டாள் கணக்கு

வாழ்க்கை என்கிற வரவு செலவு கணக்கில் நான் நித்தம் செலவாகிறேன்... என் பெயரில் வரவு என்பதெல்லாம் வட்டி கணக்குகள் -இது குட்டியிடும் கணக்குகள்... கழித்து கழித்து கிழிந்து போகிறேன் கொஞ்சம் கலைந்து கலங்கி காணாமலாகிறேன்... கூட்டத்தான் பார்க்கிறேன், கூட்டத்தின் நடுவே நானே கூடிக்கொள்கிறேன் இங்கே வகுக்கப்படுகிறேன்... தினம் தினம் வட்டிக் கணக்குகளை விட வசை கணக்குகளே-என்னிடம்  அதிமாகும் சகிதம்... பெருக்கல் கணக்குகள் பெருக்கும் போதெல்லாம் சுருக்கும் கணக்குகளாய் சுருங்கி போகிறேன்... விதி கணக்கும் - கூட  சதிக் கணக்காய் மாறி சற்றே சதிராடும், என்னிடம்  கொஞ்சம் புதிர் போடும்... இத்தனை கணக்கு போட்டும் விடை புஜ்ஜியம், அதுவே என் ராஜியம்...             ✍️விசித்திரக்கவி 

இப்படியும் சிலர்

        27/02/21 விண்ணை முட்டும் விரோத விமர்சனங்கள் விசித்திர வீனனின் வயோதிக வார்த்தைகள்... இல்லாத மேடையில் பொல்லாத கச்சேரி சிங்காரியின் ஒய்யாரத்தில் ஒட்டகம் சிறுத்துப்போச்சி... பட்டம் பாடுதடி பட்டாம்பூச்சியோடு பந்தயமாம் பட்டம் பெற்றதால் படம் காட்டுதடி... ஐயோ!... பாவம் பட்டமே நூலறுந்துப்போச்சி பகட்டு வாழ்க்கையோ பாதியிலே போச்சி... வாய்முழுக்கப் பேச்சி-அதனால் வயிறும் வத்திப்போச்சி... போடா போடா  இங்கே நானும் புத்தனடா...            ✍விசித்திரக்கவி 

நான்

Image
                 22/2/21 கவலைகளை நான் கடன் வாங்கிவிட்டேன் கற்பனைகளை கண்ணாடி குடுவைக்குள் தொலைத்துவிட்டேன்... காரணங்களை தேடி கண்ணீரோ... உலா போகிறது... சத்தமின்றி மீண்டுமது எனையே அணைக்கிறது... தழுவிய காயங்கள் தாங்கிய மார்புகள் தவித்த இதயம்-அது  தாங்காத துயரம்... தொலைவாய் போகிறேன் தொலைந்தும் போகிறேன் தொலைதூர நிலவாய் துக்கம் கொள்கிறேன்... துடித்தும் பார்க்கிறேன் துளிர்த்தும் பார்க்கிறேன் துணிவு இழந்து தூனாய் நிற்கிறேன்... அழுகவே அதிகம் ஆசை கொள்கிறேன் இரவெல்லாம் முயற்சித்து இறுதியில் தோற்கிறேன்... ஓய்வின்றி அழுகிறேன் ஆராவாரம் இல்லையாம்... ஆத்திரத்தின் உச்சியில் சூத்திரம் தவறாம்... சுற்றிச் சுற்றி சுகங்களை பார்க்கிறேன் சுதந்திர வானிலது சூனியமாய் போனது... இருந்தும் இருக்கவே இறுதிவரை முயல்கிறேன்... மூச்சொன்று உள்ளவரை முழுமையாய் இருப்பேன்...            ✍விசித்திரக்கவி

தொலைதூரத்து சொந்தமவள்...

கோடைக்கால வெப்பத்தில் குற்றாலச் சாரலாய் குட்டி தேவதையவளை குறும்புகாரியெனக் கண்டேன்... கண்களால் பேசினேன் யார் அவள் என் தாயின் அசல் நகலா... இல்லை இல்லை எனக்காய் பிறந்த அன்னை உருவத்தின் அதிசய மகளா... அதிர்ச்சியிலே சிலநாள் ஆனந்தத்தில் பலநாள் வார்த்தைகள் இல்லை வாய்ப்பேச வாய்ப்பில்லை... கடந்தது காலம் கனிந்தது பொழுது கூடியது கூட்டம் கொட்டியது மேளம்... இணைந்தது உறவுகள் இணைத்தது இருமனம் அது தான் அழகியத் திருமணம்... அங்கே தான் அந்த தூரதேசத்து பெண்நிலவை கண்டேன் தன்னிலை அறிந்தேன்... இல்லாத உறவொன்றை இமையோரம் கண்டேன் இல்லத்தில் இல்லாத தங்கையென கொண்டேன்... தங்கையென வந்தாள்-பல  தாளங்கள்  தந்தாள் தலைமேல் குதித்தாள் தவிகையிலே தாயாய் தாங்கினாள்... காணாத விழிகளில் கரையாத நினைவுகளாய் கன்னத்தில் வழியும் வலிநிறைந்த கண்ணீர்... வழிகள் தேடி இணைய வீதிகளிலே இதயத்தின் துடிப்பை இருவிழியில் கண்டேன்... சண்டைகள் எங்களின் பெரும் மகிழ்ச்சி அமைதியே எங்களின் மாபெரும் விரோதி... விடிகின்ற பொழுதெல்லாம் எங்களின் குறும்பின் சிரிப்பில் பிடித்து வைத்த ஆயுள்கைதிகள்... நாங்கள் நாங்களாய் நாட்கள் எல்லாம் எங்களின் வசங்களாய்-...

தாவணி நிலவே...

Image
                     17/02/21 பாதகத்தி நீயும் -தான் படபடக்கும் நெஞ்சத்தில் படை யெடுத்தாய்... பட்டாகத்தி இல்லாம- உன்  கூர்விழிகாட்டி பாவிநெஞ்சத்தை பதற வைத்தாய்... கரிசல்காட்டு பூவே -உன்  கண்ணிரெண்டில் விழுந்தேன் அங்கேதான் இதயமிழந்தேன்... இரண்டாம் நிலவே -என்  இம்சை ராணியே அகிம்சையாயிம்சை செய்யாதே... வராமல் வருகிறாய் தாராமல் தருகிறாய் தனியே தவிக்கிறேன்... கனவுகளிலே மிதக்கிறேன் நிஜத்தினிலே வாழ்கிறேன் நித்தமுனை நினைக்கிறேன்... உன்னைத்தான் சுவாசிக்கிறேன் கூண்டுக்கிளியாய் உன்னுள் அடைபட ஆசைகொள்கிறேன்... தாவணி நிலவே சொட்டும் மழையே குளிரும் அகலே... குட்டி தேவதையே குறும்பு சிரிப்பே வெட்க சரலே... வெப்ப சலனமே வீசிவரும் காற்றே உன்னாலே வாடுகிறேன்... உன் பெயரையே தினம் படுகிறேன் திக்கிழந்து திரிகிறேன்... தீயாய் எரிகிறேன் என்னையே வெறுக்கிறேன் உன்னையே தேடுகிறேன்... அணைக்க வந்திடு ஆகாசம் விட்டு சுவாசம் தந்திடு... அனைத்தும் நீயே ஆகிடு பார்வையின் அர்த்தம்தனை பாவை நீயும் கூறிடு... போதும் போதும் என்னுள் வாழ்ந்திடு புது வார்த்தைகளை சொல்லிடு.....

யாதொன்றும் இல்லை

Image
மனமே... ஏங்குகிறேன்... கேட்க யாருமில்லை நாதியற்று கிடக்கிறேன் நாளுமிங்கே தவிக்கிறேன்... கதவுகள்பல தட்டினேன் -அது  வாசல் வரை வாய் திறந்து வாழ்த்திப் போனது... யாரையோதேடி ஓடுகிறேன் ஓட்டத்தின் நடுவே ஆங்காங்கே விழுகிறேன் மீண்டும் எழுகிறேன்... மின்னலை பார்க்கிறேன் மின்மினியை அணைக்கிறேன் கானல்நீரை குடிக்கிறேன் கலங்கித்தான் போகிறேன்... காயங்கள் கண்டேன் பிழைகள் கொண்டேனா  பித்தனாய் கொஞ்சம் சித்தமிழந்து போகிறேன்... உடலோடு வாழ்கிறேன் உயிரை தேடுகிறன் உணர்வுகளை வெறுக்கிறேன் உலகமதில் ஊமையாகிப்போகிறேன்... கண்டது சில கோடி காணாதது பல கோடி நம்பிக்கை கொண்டதால் நான் மட்டும் தெருக் கோடி... அட போடி... போன தெல்லாம் போன பின்னே நாமும் ஒருபிடி சாம்பல் தானடி...         ✍விசித்திரக்கவி 

ஏனடி மறந்தாய்

Image
நெஞ்சம் மறப்பதில்லை நினைவுகள் அழிவதில்லை கனவுகள் கலைவதில்லை அலைகள் ஓய்வதில்லை அவள் மட்டும் என்னை நினைப்பதே இல்லை... காதல் தந்தாள் கற்பனைகள் தந்தாள்... ஏனோ என்னை தனியே விட்டுவிட்டாள்... தீயிலே வாடுகிறேன் தீவாய் போகிறேன்... வார்த்தை ஒன்றை வாய்திறந்து சொல்லிவிடு என்னையும் கொஞ்சம் நீ வாழவிடு...                  ✍விசித்திரக்கவி

என் இதயமே

Image
மார்புக் கூட்டுக்குள் மத்தளம் கொட்டுதடி மங்கையுன் விழிகளில் -அது மதிமயங்கி போகுதடி... கனகவள்ளியுனை நினைத்து -என் கனவுகள் நீளுதடி காட்சிகளுக்கு நித்தமது கண்களில் ஏங்குதடி.. வண்ண மயிலே வளமை புயலே வாலிப நிலவே வந்துவிடு வந்துவிடு வரமொன்றை தந்துவிடு...                  ✍️விசித்திரக்கவி

விடிய போகுது வா...

Image
புதியதொரு காலை-இனி  புதியதாய் பூக்கட்டும் புதுமலரின் வாசம் பூலோகமெல்லாம் வீசட்டும்... வெற்றிநடை போட-நீ  வீரத்தோடு விளையாடு நம்பிக்கையொன்றே நிரந்தரம் -இங்கே நாளுமது சுதந்திரம்... உன்பெயரை சுமக்க இமயம் ஏங்கிகிடக்குது உன்வெற்றியை கொண்டாடவே கடல் ஏழும் காத்துக்கிடக்குது... வாழ்க்கை ஒருமுறை தான் வாழ்ந்தே தீர்ப்போம் வா...                   ✍️விசித்திரக்கவி

தேடுகிறேன்...

Image
என்னை நானே இழந்து தேடுகிறேன்... எப்படி இழந்தேன் யாருக்காக இழந்தேன்... எதற்காக இழந்தேன்-என்பதை அறிந்தவர்கள் அறிந்த பின்னும் அகந்தையில் பேசுகையில்-நான்  அர்த்தமற்று போகிறேன்... அந்த நேரமே அடிவயிற்றில் ஆயிரம் இடி விழுந்தாற்போல் அதனை வலி... எப்படி சொல்வேன் எனக்கும் மனசுண்டு என்பதை...

காட்சி தருவாளா...!

Image
                    03/02/21                     ✍விசித்திரக்கவி  கவிதைகள் ஆயிரம் கண்டேன் அங்கேதான் அவளை கண்டேன் மொழிகள் நூறினை தந்தாள்-என் வார்த்தைகளை பறித்துக் கொண்டாள்... அழகே போர்க்களம் போவது -போல் சின்ன நடையே படையாக சிங்கார படையே நடையாக தேவதையாய் பவனி செல்கிறாள்... அவளது சிலிர்த்த தேகத்தால்-எனை  கொஞ்சம் சிறை வைக்கிறாள் சின்னச் சின்ன சிலுங்களில் அதிகம் ஆட்டி வைக்கிறாள்... பால்நிலவாய் பட்டாடை கட்டி-எனை பார்த்துப் பார்த்து சிரிக்கிறாள் பக்குவமாய் பார்த்தே ஈட்டி-பார்வையினை பாதகத்தி குத்தி போகிறாள்... காயம்பட்ட வேகத்தில் பாவப்பட்ட-எனை பவள பல்லக்கில் கடத்துகிறாள் கடத்தியவளே காதல் மொழிபேசி காற்றாடியாய் சுற்ற வைக்கிறாள்... அவளையே சுற்றிச்சுற்றி வருகிறேன் -அவள் கண்பார்த்து பேச முயல்கிறேன்... மான்குட்டி விரல் பட்டால்-நானோ  தோகை மயிலாய் ஆடுகிறேன்... முயல் குட்டியின் முன்னழகில் முழுவதுமாய் மூச்சிழந்து போகிறேன் பின்னழகின்  கூந்தல் வாசம்பட்டே கொஞ்சம் சுவாசம் கொள்கிறேன்... இனி.....

புதிய நாடு 3

Image
                  30/01/21                   ✍விசித்திரக்கவி  அன்றைய நிகழ்வு அவனது மனதிற்குள், ஓயாமல் அடிக்கும் அலைகளை விட, கடும் சுனாமியின் சீற்ற அலைகளாக அடித்து கொண்டிருந்தது... பிஞ்சு மனதிற்குள்ளும் எரிமலையும் வெடிக்கும் என்பது, அன்று அவன் கண்களில் மூலம் கர்ச்சித்தது... அசகாய சூரனெல்லாம் அடங்கி போகும் அளவுக்கு கண்களில் ஒரு மாபெரும் பார்வை... ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை அல்லவா... மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றுள்ள சில வெள்ளை மனம் கொண்ட மாமனிதர்களும், மகத்தான அரசியல் தலைவர்களும் நிலமையை கண்டு கண்ணீர் வந்தும் காட்டாமல், வயிற்றின் பாட்டையறிந்து இயன்றதை கொடுத்து உதவினார்கள்... சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டான் என்னும் முதுமொழிக்கேற்ப்ப, உதவியக் காரங்களின் கருணைகள் யாவும், அதை கண்கானிப்பவனின் கைக்குள் அடக்கமாகி போவதை கண்டால், கண்களே குருடாகி இருக்கலாம் என்றே மனம் கொதிக்கிறது... எழுத்துக்கள் மூலம் பார்க்கும் நமக்கே இப்படி என்றால் இழப்பில் உள்ளவனின் உள்ளத்தில் எப்படி இருக்கும்,இடி ...

புதிய நாடு 2

Image
                           ✍️விசித்திரக்கவி  எந்த நிலையிலும் தவறாமல் தன்னுடைய பொன்னான கரங்களை நீட்டி அனைவரையும் அணைக்கும் ஆதவனே அன்று, எந்த கரங்களை நீட்டி அணைப்பதென்று தெரியாமல் ஸ்தம்பித்துப்போய், காட்சிகளை கண்ட கண்களில் செந்நிறகண்ணீர் வடிய, ஆத்திரத்தின் உச்சியில் முதல் முறையாக தனக்கு தானே தீ மூட்டி தண்டனை ஏற்பதாக நினைத்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்ற வேளையில்... அதே சமயம் இன்னொரு புறத்தில்,நிலவாய் வேடிக்கை பார்த்த சில அரக்க குணம் படைத்த அரசியல் வாதிகளும்,அதற்கு துணை போன நட்சத்திரங்களாகிய அரசாங்க ஊழியர்களும், இரவு நடந்த கொடூரமான சம்பவத்திற்கு இன்று மாலை இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கற்பாவினை தயார் செய்கிறார்கள்... நகரம் நரகமாய் மாறி கண்களே நடுங்கும் வகையில் காட்சியழிக்கிறது... இறந்தவர்கள் ஒருபுறம், பறிகொடுத்தவர்கள் ஒரு புறம், உயிருக்கு போராடும் பிஞ்சுகள் ஒரு புறம், ஐயோ,கை குழந்தை ஒன்று பசியின் கொடுமையில் வடிக்கின்ற செங்குருதிதனை தன் செந்தாமரை இதழ்களால், தாய் எவள் என்றே தெரியாமல் தீண்டும் காட்சிதனை கண்டு கற்ச...

கண்ணாடி காகிதங்களே

Image
அந்திசாயும் நேரத்தில் ஆகாச வெண்ணிலவாய் அழகாய் வலம்வரும் பெண் நிலவோ! சிற்றுடல் தளிர்மேனியில் தங்கநிற தாவணி தைதையென சிங்கார தாளம் போடுதோ! வட்ட நிலா எட்டிப் பார்க்க சுட்டி நிலா சுற்றிப் பார்க்குதோ! மண் ணுலக மந்தரையின் சஞ்சராம் விண் ணுலக வாசிகளின் சங்கடமோ! வாடிப் போன வாடை காற்று வஞ்சியிடை தொட்டு ஆடிப் போகுதோ! கார் குழலியின் காலடி மண்ணெடுக்க கடமை மறந்து காலனவன் வருவானோ! மைவிழி மங்கையின் மாதுளையிதழ் தொட்ட தென்னாட்டு தென்றலது போதையினால் தள்ளாடுதோ! பேதை அவளும் பூங்கோதை யென புலோக மதிலே பூவாசம் வீசுகிறாள்... அந்நிலை கண்டவன் தன்னிலை மறந்து தள்ளாடும் தென்றலது பாவையிடம் சேர மயங்கிய மனமதை மயக்கிய தேவதைக்கு மனமார காதல்மண  மனமடல் அனுப்புகிறேன்... கண்ணாடி காகிதங்களே கண்ட கனவதை கனகவள்ளி கண்ணோடு கச்சிதமாய் கூறுங்கள்...                     ✍️விசித்திரக்கவி

என்னருகே நீ வேண்டும்

இரவின் மடியில் பூவாய் நானுறங்க தாலாட்டும் தேவதையாகி தித்திக்கும் தமிழோடுயெனை  மொத்தமாய்  அணைத்து கொஞ்சமாய் கொஞ்ச தேவன்மகளே  என்னருகே நீ வேண்டும்... சின்னச்சின்ன இம்சைகள் பல தந்து ஆகிம்சையாய் இம்சை யெனை செய்து குறும்பு பார்வையில் என்அரும்பு மீசையினை சீண்டிட என்னருகே நீ வேண்டும்... விழாக்கால விடியல் போல் தேவதை நீயும் திருவிழா கோலத்தில் நித்தம் எனை உன் வெட்கமழை சாரலில் நனைத்திட என்னருகே நீ வேண்டும்...             ✍விசித்திரக்கவி   

ஆண்

Image
அவனாய் அவனில்லை அவனாய் இருந்தும் அழுவதற்கு ஏனோ ஓர் வழியில்லை... ஆயிரம் கரம்கொண்ட ஆகாயச் சூரியனையும் இரு கரம்கொண்டு இருக்கி பிடிப்பான்... ஆண்மகன் தானென அடையாளம் கண்ட நாள்முதல் அவனுக்கு  நித்திரை யேது... சித்திரை வெயிலானாலும் சிலிர்க்கும் குளிரானாலும் ஆகாயம் மென்றாலும் ஆழ்கடல் திண்றாலும் துன்பமதை அறிவதில்லை துயர் துடைக்க தூயவன் தன்கரம் நீட்ட தவறியதில்லை... பிள்ளை பருவத்திலே நினைத்து நினைத்து நெஞ்சமதை நெருப்பாய் எரிய வைப்பான்... குமரப் பருவத்திலே குமரிப் பெண்ணின் இளமை குணத்திலே தன்னிலை குலைவான்... பின்பதை  நொந்து தன்னிலை பார்த்தே தாரமதை அமைப்பான்... தேடிய நாள்முதல் தேய்பிறையாய் தேடித்தேய்வான் தேடிய அனைத்தும் தீவாய்போக காண்பான்... சொந்தம் பந்தம் சொத்து சுகம் மனைவி மக்கள் சுற்றும் முற்றும் அனைத்தும் அறிந்தபின் ஆவி துடித்து கட்டையிலே போகையில் யாரேனும் கதறியழுதால் பதறி எழுவான் உள்ளதை தருவான் உள்ளத்தாலே உருகுவான்... உள்ளோர் உண்மையினை அறிந்தால் உத்தமனின் வாழ்க்கையை கண்டு காணாத கானல்நீர் போல் என்பர்...               ✍️விசித்திரக்கவி 

வசதி

Image
வசதி வசதி என்பதெல்லாம் வசதியோ... வாடகை உடம்புக்கு வற்றாதாசை வசதியோ... அங்கமெல்லாம் தங்கமாய் மின்னுவது வசதியோ... கூரைகள் மின்னும் வைர மாடமாளிகைகளில் வசிப்பது வசதியோ... வளைத்தலுக்கு ஏற்றாற்போல் மானுடர்களை வளைக்கும் பணமோ வசதி... இல்லை இல்லை இதுதான் வசதி... உறவுகளுடன் உணர்வாய்-உயிர்  உள்ளவரை வாழ்வது வசதி... உழைப்பிற்கு ஒத்தாசையாக உடல் ஒத்துழைப்பது வசதி... சிந்திக்க கிடைக்கும் கல்வி வசதி...  செயல்படுத்த கிடைக்கும் அறிவு வசதி... வெற்றிக்கு தோல்விதான் ஆகச்சிறந்த வசதி... நல்லவனோடு உலகை சேர்த்து ரசிப்பது வசதி... இறுதியில் ஆறடி இடம் கிடைத்தால் வசதியோ வசதி...        ✍விதித்திராக்கவி

காதலை மறைத்த தோழிக்கு

Image
சாயும் போதெல்லாம் தோள் கொடுத்தேன் துடிதுடிக்கும் போதெல்லாம் தூறல்மழையாய் துள்ளவைத்தேன்... மடிமீது சாய்கையில் அன்னையும் ஆனேன் எல்லைமீறும்  போது அண்ணனும் ஆனேன்... துயரமென்றால் தூக்கிப்  பிடிக்கும் தந்தையுமானேன் நிலவாய் நீயிருக்க நீல வானமானேன்... தினம் தினம் நீ பார்க்கும் பிம்பத்தின் அழகிய  கண்ணாடியு மானேன்... நீயும் நானும் நிழலும் நிஜமென நிறைந்தே வாழ்ந்தோம்... நீரோடு கயலாக அவனோடு அவளாக உயிரோடு உறவாக மனதோடு போனாய் விழி நீரோடு விதியாலே நின்றேன்... எல்லாம் நானாய் துணை யிருக்க கள்ளி நீயும்  காதலை மட்டும்  கல் மனத்தோடு மறைத்த மாயமென்ன... இருவிழியாக இருந்தாலும் பார்வையிலே பாகுபாடு என்னோடு உண்டோ... மறைத்தவள் நீயும் மறந்து போக உன் மனமறிந்த தோழன் நானும் கொஞ்சம் மறுத்துப்போகிறேன்...                 ✍விசித்திரக்கவி 

ஒருதலைக் காதல்

Image
ஆயிரமாயிரம் அழகிகளும் அசந்து பார்க்கும் அழகின் உச்ச  அதிசயம் அவன்... அரும்பு மீசையில் குறும்பு சிரிப்பில் எனை கொள்ளையடிக்கும் கருப்பு பேரழகன்... பார்த்து பார்த்து பக்குவமாய் வைத்தேன் வைத்ததில் யெல்லாம் -உன் நினைவையே வைத்தேன்... உனை நினைத்து மருதாணி செடியோரம் மயங்கி நிற்க்கிறேன்  பளிங்கு மேனியெல்லாம் சிவந்து  வெட்குகிறேன்... தினம்தினம் பார்க்கிறேன் தீயாய் ரசிக்கிறேன் உன்னைத்தானே நேசிக்கிறேன் கனவிலே வாழ்கிறேன்... ஏந்திழையாள் ஏங்குகிறேன் ஏக்கமது காணலையோ கருமைநிறக் கண்ணா -உன் கண்மணியை தேடலையோ... இரட்டை  கண்களால் சுட்ட சூரியனாயிருந்தும் சுற்றிசுற்றி வரும் சூரியகாந்தியெனை பார்கலையோ... வண்ண மலரோடு வஞ்சி நானிருந்தும் வண்ணத்தோகை விரித்தாட மயிலோன் நீ வாரலையோ... காக்க வைச்சது போதுமடா மச்சான் காலம் நேரம் கூடி வந்தாச்சி... காதலையும் காதோடு கனிவாய் பாடியாச்சி இனி நீயும் கார்கால மேகம்போல் கண்ணே எனைத்தேடிவா... காதலோடு காத்திருக்கேன் கண்ணா நீயும் பூ முடிக்க பூமாலையாய் பூத்திருக்கிறேன்...                 ✍விசித்திரக்கவி  

புதிய நாடு

Image
                              ✍விசித்திரக்கவி                                         06/01/2021 நம் கற்பனையின் கண்களுக்கு புலப்படாத  தூரத் தேசத்து நகரமொன்றில் ஏற்பட்டப் பெரும் சத்தத்தின் அதிர்வில் ஐந்து வயது நிரம்பாதச்  சிறுவன் எழுந்து  தன் தாய் மற்றும் தகப்பனை தேடி திறந்தக் கதவின் வழியே வெளியே வீதிக்கு வருகிறான்... அந்த விடி வெள்ளி தோன்றாத அதிகாலை பொழுதில்... மூன்றாவது படி தடுக்கி கீழே விழுகையில் தான் தெரிகிறது அழகிய வீதியின் அலங்கோலம்... நீண்டப் பசியில் இருந்தது போல வீதியின் இரு புறங்களிலும் பற்றி எரியும் நெருப்பு... அழகாக உருவம் காட்டக் கூடிய கண்ணாடிகளின் உடைந்தச் சிதறல்கள்... இடர்பாடுகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்கள்... கண்ணீர் புகை குண்டுகள் காதை துளைக்கும் தோட்டங்களின் சத்தங்கள் இமயம் உருகும் அளவுக்கு அலறல் ஓலங்கள்... தன் சக்திக்கு தாண்டி பீச்சி அடிக்கும் தண்ணீரின் வேகத்தில் கரையாதக...

இப்போதே வருக...

Image
தள்ளாடும் வயதில் தடி கொண்டு தள்ளாடி தலைகவிழ்ந்து தவழ வேண்டாம்... கைகள் நடுங்கி உடல் ஒடுங்கி குரல் மங்கி தோல் சுருங்கி நோய் உண்டு பால் உண்டு பாயிலே பிரண்டு இளமை போய் முதுமை வந்து கால் வழியே சலசலவென இறங்கி அங்கண வாடை வேண்டாம்... சுயம் மறந்து சுற்றம் துறந்து நினைவு இழந்து நித்திரை பறந்து நிம்மதி இழந்து நொந்து நான் போக வேண்டாம்... வலிமை உள்ள போதே உள்ளம் தெளிவுள்ள போதே கூற்றுவன் நாள் கூட்டி கூட்டிப் போக வருக... தடி கொண்டு தள்ளாடி தலைகவிழ்ந்து தவழ வேண்டாம்... கைகள் நடுங்கி உடல் ஒடுங்கி குரல் மங்கி தோல் சுருங்கி நோய் உண்டு பால் உண்டு பாயிலே பிரண்டு இளமை போய் முதுமை வந்து கால் வழியே சலசலவென இறங்கி அங்கண வாடை வேண்டாம்... சுயம் மறந்து சுற்றம் துறந்து நினைவு இழந்து நித்திரை பறந்து நிம்மதி இழந்து நொந்து நான் போக வேண்டாம்... வலிமை உள்ள போதே உள்ளம் தெளிவுள்ள போதே கூற்றுவன் நாள் கூட்டி கூட்டிப் போக வருக...                         ✍️விசித்திரக்கவி