காட்சி தருவாளா...!
03/02/21
✍விசித்திரக்கவி
கவிதைகள் ஆயிரம் கண்டேன்
அங்கேதான் அவளை கண்டேன்
மொழிகள் நூறினை தந்தாள்-என்
வார்த்தைகளை பறித்துக் கொண்டாள்...
அழகே போர்க்களம் போவது -போல்
சின்ன நடையே படையாக
சிங்கார படையே நடையாக
தேவதையாய் பவனி செல்கிறாள்...
அவளது சிலிர்த்த தேகத்தால்-எனை
கொஞ்சம் சிறை வைக்கிறாள்
சின்னச் சின்ன சிலுங்களில்
அதிகம் ஆட்டி வைக்கிறாள்...
பால்நிலவாய் பட்டாடை கட்டி-எனை
பார்த்துப் பார்த்து சிரிக்கிறாள்
பக்குவமாய் பார்த்தே ஈட்டி-பார்வையினை
பாதகத்தி குத்தி போகிறாள்...
காயம்பட்ட வேகத்தில் பாவப்பட்ட-எனை
பவள பல்லக்கில் கடத்துகிறாள்
கடத்தியவளே காதல் மொழிபேசி
காற்றாடியாய் சுற்ற வைக்கிறாள்...
அவளையே சுற்றிச்சுற்றி வருகிறேன் -அவள்
கண்பார்த்து பேச முயல்கிறேன்...
மான்குட்டி விரல் பட்டால்-நானோ
தோகை மயிலாய் ஆடுகிறேன்...
முயல் குட்டியின் முன்னழகில்
முழுவதுமாய் மூச்சிழந்து போகிறேன்
பின்னழகின் கூந்தல் வாசம்பட்டே
கொஞ்சம் சுவாசம் கொள்கிறேன்...
இனி...
கனவிலே வாழ்ந்தது போதும் - அவள்
என் கண்ணெதிரே வருவாளா...!
காற்குழலி காட்சி தருவாளா...!
கனவுகளை கலைத்து காத்திருக்கிறேன்...
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...