புதிய நாடு 2
✍️விசித்திரக்கவி
எந்த நிலையிலும் தவறாமல் தன்னுடைய
பொன்னான கரங்களை நீட்டி அனைவரையும் அணைக்கும் ஆதவனே அன்று, எந்த கரங்களை நீட்டி அணைப்பதென்று தெரியாமல் ஸ்தம்பித்துப்போய், காட்சிகளை கண்ட கண்களில் செந்நிறகண்ணீர் வடிய, ஆத்திரத்தின் உச்சியில் முதல் முறையாக தனக்கு தானே தீ மூட்டி தண்டனை ஏற்பதாக நினைத்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்ற வேளையில்...
அதே சமயம் இன்னொரு புறத்தில்,நிலவாய் வேடிக்கை பார்த்த சில அரக்க குணம் படைத்த அரசியல் வாதிகளும்,அதற்கு துணை போன நட்சத்திரங்களாகிய அரசாங்க ஊழியர்களும், இரவு நடந்த கொடூரமான சம்பவத்திற்கு இன்று மாலை இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கற்பாவினை தயார் செய்கிறார்கள்...
நகரம் நரகமாய் மாறி கண்களே நடுங்கும் வகையில் காட்சியழிக்கிறது...
இறந்தவர்கள் ஒருபுறம், பறிகொடுத்தவர்கள் ஒரு புறம்,
உயிருக்கு போராடும் பிஞ்சுகள் ஒரு புறம்,
ஐயோ,கை குழந்தை ஒன்று பசியின் கொடுமையில் வடிக்கின்ற செங்குருதிதனை தன் செந்தாமரை இதழ்களால், தாய் எவள் என்றே தெரியாமல் தீண்டும் காட்சிதனை கண்டு கற்சிலையாகிப்போன கடவுள் கூட கதறி கண்ணீர் வடித்திருப்பான்...
அத்தனை நேரமாகியும் உதவிகரங்கள்
நீட்டாத மனிதம் வாழ்ந்து என்ன பயன் பிறந்து என்ன பயன்...
எதற்கு இத்தனை கலவரம்...?
எதனால் இவ்வளவு பெரிய கொடுமை...?
இந்த நகரத்திற்கு என்ன தொடர்பு...?
உண்மையை சொல்ல போனால்,
இந்த நகரத்திற்கும் நடந்த நிகழ்வுகளுக்கும் ஒரு துளியேனும் தொடர்பு இல்லை...
அந்த நகரத்திற்கு இருபுறமும் உள்ள பெரும் ஆளுமை கொண்ட இரு நகரங்களின் ஆதிக்க வெறி,
அவர்களுக்கு இடையேயான பொருளாதார போட்டி, அது மட்டுமா சிலரின் சமயவெறி,
சாதிவெறி, இது போன்ற ஒட்டு மொத்த
முட்டாள் தானத்தின் வெளிப்பாடே இந்த சம்பவம்,
இதற்கு இன்னாட்டு சில அரசியல்வாதிகள் துணைப்போனதால் ஏற்பட்ட விளைவுகள்...
பாவம் அந்த நகரத்து மக்கள்...
இதோ கண்களே கூசும் வகையில் சமாதான நிறமான வெள்ளை உடையில்
சர்வாதிகாரம் படைத்த அரசியல் வாதிகள்
நிவாரணம் என்ற பெயரில் ரொட்டி துண்டுகளும் ஐந்தாயிரம் ரூபாய்களும் தலா ஒரு குடும்பத்திற்கு வீதம் அந்த நகரது வாசிக்களுக்கு...
அடடே...! எவ்வளவு பெரிய நிவாரணம்...
நிவாரண கூடங்கள் எல்லாம்
நிர்வாண காட்சிகளுக்கு ஏங்கும்
நரி கூட்டங்களால் ஆக்கிரமிக்க பட்டுள்ளது...
ஆறுதல் இல்லை,மருத்துவம் இல்லை,
மயங்கிய மனிதனுக்கு ஒரு பிடி சோறுமில்லை, தாகம் தீர்க்க ஒரு குடுவை நீருமில்லை...
எத்தனை பெரிய மனது அந்த வெள்ளை உடுப்பு உடுத்திய பெரிய மனிதர்களுக்கு...
காவல் படைகள் காவலுக்கு நிற்கிறது...
எப்படி தெரியுமா...?
வலியில் கதறும் அப்பாவி மக்களின் குரலோசை காற்றில் கலக்காத வண்ணம் காவலுக்கு நிக்கிறது...
எவ்வளவு பெரிய அடக்குமுறை நிகழ்கிறது...
ஒட்டு மொத்த உரிமையும் பறிக்க பட்டு,
உள்நாட்டு அகதிகளாய்,ஊமை பிணங்களாய், வாய்மூடி நிற்கும் காட்சிகளை பச்சைமரத்தில் ஆணி அடித்தாற்போல் கண்களின் வழியே தன் மனதிற்குள் பதியவைத்து கொண்டிருக்கிறான்...
அந்த சிறுவன்...
என்ன ஒரு ஆழமான வார்த்தைகள்...
ReplyDeleteபடிக்கும் போதே கண்களை கண்ணீர் ஆக்கிரமிப்பு செய்கிறது...
வரிகளை வாசித்ததில்
ReplyDeleteகண்ணில் தூசிதட்டியதா
இல்லை ஊசி குத்தியதா
எனக்குத் தெரியவில்லை,
கலங்கியது காவிரி ஓடியது
கவிஞரே உங்கள் புதியநாட்டில்
சமாதானாம் உண்டாகட்டும்...