கண்ணாடி காகிதங்களே
அந்திசாயும் நேரத்தில்
ஆகாச வெண்ணிலவாய்
அழகாய் வலம்வரும்
பெண் நிலவோ!
சிற்றுடல் தளிர்மேனியில்
தங்கநிற தாவணி
தைதையென சிங்கார
தாளம் போடுதோ!
வட்ட நிலா
எட்டிப் பார்க்க
சுட்டி நிலா
சுற்றிப் பார்க்குதோ!
மண் ணுலக
மந்தரையின் சஞ்சராம்
விண் ணுலக
வாசிகளின் சங்கடமோ!
வாடிப் போன
வாடை காற்று
வஞ்சியிடை தொட்டு
ஆடிப் போகுதோ!
கார் குழலியின்
காலடி மண்ணெடுக்க
கடமை மறந்து
காலனவன் வருவானோ!
மைவிழி மங்கையின்
மாதுளையிதழ் தொட்ட
தென்னாட்டு தென்றலது
போதையினால் தள்ளாடுதோ!
பேதை அவளும்
பூங்கோதை யென
புலோக மதிலே
பூவாசம் வீசுகிறாள்...
அந்நிலை கண்டவன்
தன்னிலை மறந்து
தள்ளாடும் தென்றலது
பாவையிடம் சேர
மயங்கிய மனமதை
மயக்கிய தேவதைக்கு
மனமார காதல்மண
மனமடல் அனுப்புகிறேன்...
கண்ணாடி காகிதங்களே
கண்ட கனவதை
கனகவள்ளி கண்ணோடு
கச்சிதமாய் கூறுங்கள்...
✍️விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...